இந்தியாவில் பிறந்ததற்காகப் பெருமைப்படச் செய்யும் பெருமிதம் இது!

இந்தியாவுல  வந்து ஏன்டா பொறந்தோம்னு  நினைக்கிறீங்களா? இப்படிப்பட்ட எண்ணம் நம்மில் சிலருக்கு அவ்வப்போது வந்து போவது இயல்பு. அப்படிப்பட்டவர்களுக்காகத்தான் இந்த கருத்துக்கோவை.இந்தியாவில் பிறந்ததற்காகப் பெருமைப்படச் செய்யும் தருணம் இது!

இந்தியாவைப் பற்றி வெளிநாட்டு அறிஞர்கள் கூறிய கருத்துக்களின் தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்காக…. படித்துப் பார்த்தால் நிச்சயம் அசந்து போவீர்கள்.

உலகில் தோன்றிய நாகரிகங்களான கிரேக்க நாகரிகம், சுமேரிய நாகரிகம், எகிப்திய நாகரிகம், பாபிலோனிய நாகரிகம் முதலிய நாகரிகங்கள் எல்லாம் இன்றைக்கு உதிர்ந்து விட்டன. அவற்றின் சுவடுகளை நாம் அருங்காட்சியகங்களிலோ, பாடப்புத்தகங்களிலோ மட்டுமே காணலாம். ஆனால், இந்திய நாகரிகங்களான பஃறுளி ஆற்று நாகரிகம் (குமரிகண்டம்) மற்றும் சிந்து சமவெளி நாகரிகம் இன்றைக்கும் இந்தியாவில் தமிழர் பண்பாடு மற்றும் இந்து தர்மம் என்ற பெயரில் ஒரு வாழ்க்கை முறையாகவே இருந்துகொண்டிருக்கிறது என்றால், அதற்குக் காரணம் அதன் அழியாத உண்மைத் தன்மையும், விஞ்ஞான, மெய்ஞ்ஞான அடித்தளமுமே ஆகும்.

ஜெர்மனியைச் சேர்ந்த உலக வரலாற்றாசிரியர் மேக்ஸ்முல்லர் இந்தியாவைப் பற்றி சொல்வதைக் கேளுங்கள்… ”எந்த நாடு  புராதன காலத்திலிருந்தே கல்வியறிவிலும், கலாசாரத்திலும் சிறந்து விளங்கியிருந்தது என்று என்னைக் கேட்டால், நான் இந்தியாவைத்தான் காட்டுவேன்.
நான் உலகம் முழுவதும் சுற்றி வந்து பார்த்ததில், உலகிலேயே சிறந்த செல்வமும், சக்தியும், அழகும், இயற்கையால் வழங்கப்பட்ட இடம் எதுவென்றால், அது இந்தியா தான்.

வானத்துக்குக் கீழ் முழு வளர்ச்சியடைந்த மனித மனமும், வாழ்க்கையின் மிக முக்கிய பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வுகளைக் கொண்டதாகவும் திகழும் ஓர் இடம் எது என்று என்னைக் கேட்டால், நான் உடனே இந்தியாவைக் காட்டுவேன். எந்த ஒரு இலக்கியம், மிகவும் சரியானதும், நம்முடைய அக வாழ்க்கைக்குத் தேவையானதும், மிகவும் பரந்த அனுபவங்களைக் கொண்டதும், எல்லாவற்றிற்கும் தகுதியானதும், உண்மையில் மனித வாழ்க்கையின் சரியான இலக்கியமானதும் எது என்று கேட்டால் மறுமுறையும் நான் இந்தியாவையே காட்டுவேன்.  அதற்கு ராமாயணம், மகாபாரதம் ஆகிய இரண்டு இதிகாசங்களுமே சான்று.

நான் மீண்டும் இந்த உலகத்தில் பிறக்க விரும்பவில்லை. அப்படிப் பிறந்துதான் ஆகவேண்டும் என்று ஆண்டவன் விரும்பினால், என்னை இந்தியாவில் அதிலும் தென்னிந்தியாவில், ஒரு இந்துவாகப் பிறக்கச் செய்யட்டும்.”

– மேக்ஸ்முல்லர்

இந்தியா எங்கள் மூதாதையர்களின் தாய்நாடு. சமஸ்கிருதம் எங்களுடைய ஐரோப்பிய மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி. மேலும், அவள் (இந்தியா) எங்கள் தத்துவங்களுக்கெல்லாம் தாய். கணித சாஸ்திரத்தின் மூலம் அவளே அரேபியர்களின் தாய். புத்தனை உருவாக்கியவள். கிராமப் பஞ்சாயத்து, சுயநிர்வாகம், மக்களாட்சி தத்துவத்துக்கும் தாயாவாள். பாரதத் தாய் பல வழிகளிலும் எங்களுக்குத் தாயாகிறாள்.

-வில் டொரண்ட், அமெரிக்க தத்துவஞானி.

‘ஜப்பானிய எண்ணங்களையும், தத்துவங்களையும் படிப்பது, இந்தியத் தத்துவத்தைப் படிப்பதற்கு ஒப்பாகும்’.-டாக்டர் டி.சுசுகி, ஜப்பானிய மேதை.

‘இந்தியா தன்னுடைய கலாசாரத்தின் மூலம் ஜப்பானின் தாயாகிறாள். பல நூற்றாண்டுகளாக அவள் தன்னுடைய சொந்தக் கருத்துகள், தத்துவங்கள் மூலமாக ஜப்பானின் எண்ணத்திலும் கலாசாரத்திலும் ஆதிக்கம் செலுத்துகிறாள்.’
-எச்.நாக்கமூரா, ஜப்பானியப் பேராசிரியர்.

இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்திலுள்ள மனிதர்கள், தங்களுடைய ஆடையற்ற உடலில் பல வண்ணங்களைத் தீட்டிக் கொண்டு, காட்டுமிராண்டிகளாக காடுகளிலும், குகைகளிலும் வாழ்ந்தபோது, கீழை நாட்டிலுள்ள இந்தியர்கள் உயர்ந்த லட்சியங்களுடன் நாகரிக வாழ்க்கை வாழ்ந்து இருக்கின்றார்கள்.
-லார்டு மெக்காலே, இங்கிலாந்து அறிஞர்

இந்தியா தன்னுடைய மதம், கற்பனை, காவியங்கள் மூலம் சீனாவுக்கு குருவாகத் திகழ்ந்திருக்கிறது. மேலும், உலகத்துக்கே குருவாக, திரிகோண சமன்பாடு (Trigonometry) நாற்கோண சமன்பாடு, இலக்கணம், உச்சரிப்புக் கலை, சாஸ்திரம் ஆகியவற்றை வழங்கி இருக்கிறது.
லின் யூடாங், சீனப் பேரறிஞர், தன்னுடைய ‘Wisdom of India’ என்ற நூலில் இந்தியா ஒரு சிப்பாயைக்கூட  தன் எல்லைக் கோட்டைத் தாண்டி அனுப்பாமலேயே சீனாவை 20 நூற்றாண்டுகளாக தன்னுடைய கலாசாரத்தின் மூலம் வென்றது. இந்த கலாசாரத் தாக்குதல் இந்தியாவில் தன்னுடைய அண்டை, அயல்நாட்டின் மீது ஏவப்பட்டதல்ல. எல்லாம் சுயமாக ஆராயப்பட்டு, சுயமாகக் கற்று, சுயமாக புனிதப் பயணம் இந்தியாவிற்கு மேற்கொள்ளப்பட்டு, சீனாவின் எல்லா பகுதிகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
-ஹூஷி, சீனத் தத்துவ அறிஞர் மற்றும் ஆசிரியர்

இந்திய வேதங்களையும், இதிகாசங்களையும், புராணங்களையும் ஆராயும்போது எத்தனையோ விந்தையான வியக்கத்தக்க பறக்கும் இயந்திரங்களும் (விமானம்) அதிபயங்கரமான ஆயுதங்களும், அதை பிரயோகிக்கும் வழிமுறைகளும் காணப்படுகின்றன.
-எரிக்வன் டெனிகன், அமெரிக்க தத்துவஞானி

‘மேற்கத்திய விஞ்ஞானிகளைவிட இந்திய விஞ்ஞானிகள் முதிர்ச்சி பெற்றவர்களாக இருந்தாலும் துரதிர்ஷ்டவசமாக அவர்கள் யதார்த்த வாழ்க்கைக்கு உதவாத மேற்கத்திய அறிவியலைப் பின்பற்ற முயற்சிக்கின்றனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அறிவியல் மற்றும் ஞானத்தில் ஊறிப்போனவர்கள் இந்தியர்கள். மகாபாரதம், கீதை ஆகியவற்றில் இடம் பெற்றுள்ள விஞ்ஞானத் தத்துவங்களை இப்போதைய உலகிற்குப் பயன்படும் வகையில் நீங்கள் அறிவியலாக மாற்ற வேண்டும்.
-ரிச்சர்ட் எர்னெஸ்ட் , நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி

‘வருகின்ற காலத்தில் உலகை வியக்க வைத்து வழிநடத்திச் செல்லும் வல்லரசாக சீனா திகழும் என்கிறார்கள். இல்லை அது இந்தியா என்பதே எனது மதிப்பீடு”
-டாக்டர்.தாமஸ் கிளெஸ்டிஸ், ஆஸ்திரிய நாட்டு அதிபர்

வருகின்ற சில ஆண்டுகளில் இந்தியாவின்முகமே மாறிவிடும். கிராமத்து மக்கள் கூட, கூட்டமாக, கூட்டுறவு சொஸைட்டிகளின் மூலமாக எவ்வாறு முன்னேற முடியும் என்பதற்கு இந்தியா ஓர் உதாரணமாகத் திகழும்.
– அமெரிக்க  முன்னாள் அதிபர் பில் கிளின்டன்,
(ராஜஸ்தானிலுள்ள நயோலா கிராமத்துக்கு விஜயம் செய்தபோது கூறியவை).

 

Ref: http://www.vikatan.com/news/spirituality/80829-proud-to-be-an-indian.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *