கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி!

“கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி” இதற்கான அர்த்தத்தை ‘ஆதி பரா சக்தி” என்னும் நாடகத்தில் ஒட்டக்கூத்தர் சொல்வதாக காட்சி அமைத்திருப்பார்கள்.

அதாவது “உலகில் முதலில் தோன்றியது கல்தான். அப்படி தோன்றிய கல்லானது, காற்றிலும் மழையிலும் கரைந்து மண்ணானது. அப்படி ஆகும் காலத்திலே, மண் உருவாவதற்கு முன்னரே, வாளோடு வீரத்துடன் தோன்றிய இனம் தமிழ் இனம்” என்று ஒட்டக்கூத்தர் விளக்கம் கொடுப்பார். நான் ஐந்து அல்லது ஆறாம் வகுப்பில் இருத்த பொழுது இதை பார்த்ததாக ஞாபகம். இந்த பாட்டினாலேயே, எனக்கு சற்று கர்வம் வந்தது என்று கூட கூறலாம்.

ஆனால், இத்தனை வருடம் கழித்து, சற்று பொறுமையுடன் யோசித்தால், தமிழ் மொழி – என்னதான் அழகான மொழியாக இருந்தாலும் தன் வளர்ச்சியை பல வருடங்களுக்கு முன்னரே நிறுத்தி விட்டது என்றுதான் தோன்றுகிறது. பல்வேறு செய்திகளை, மற்ற மொழிகளில் எளிமையாக சொல்வது போல தமிழ் மொழியில் சொல்ல முடிவது இல்லை என்றே தோன்றுகிறது.

உதாரணத்திற்கு, இன்று புத்தக கடையில், ஆடம் ஸ்மித் எழுதிய “The Wealth of Nations” என்னும் புத்தகத்தை படித்து கொண்டிருந்தேன். அப்பொழுது, இந்த புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்தால் எப்படி இருக்கும் என்று யோசித்தேன். Wealth என்ற வார்த்தைக்கு தமிழில் என்ன சொல்வார்கள் – செல்வம். அப்பொழுது முழுமையான பெயர் “நாடுகளின் செல்வம்’ என்று மொழி பெயர்க்கலாமா? எனக்கு என்னமோ நெருடுகிறது….

ஏனென்றால், The Wealth of Nations என்னும் தலைப்பிலேயே, Wealth என்ற வார்த்தைதான் முக்கியம். புத்தகமே, செல்வத்தை பற்றி. நாடுகளை பற்றி அல்ல. ஆனால், தமிழில் ‘நாடுகளின் செல்வம்’ என்று சொன்னால் கவனம் செல்வத்தை விட நாடுகளுக்கு அதிகமாக போய் விடுவது போல் இருக்கிறது.

அதை போலவே, The Wealth of Nations என்னும் தலைப்பே பணம், பொருளாதாரம் தொடர்புடைய புத்தகம் என்று சொல்லி விடும். ஆனால், ‘நாடுகளின் செல்வம்’ என்று சொன்னால், பொருளாதாரமா இல்லை வேறு எதாவது கல்வி, இயற்கை தொடர்புடைய புத்தகமா என்று புரியாமல் குழப்பம் வரும்.

இன்னும் தமிழ் மொழி வளர வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். ஒரு சில இடங்களில், அது நடப்பதும் சற்று ஆறுதலான செய்தி. உதாரணத்திற்கு, திருநங்கை (Transgender) – இணையம் (Internet) – மேகக் கணினியம் (Cloud Computing) முதலிய வார்த்தைகள் தமிழ் மொழிக்கு சமீபத்திய வரவு. வார்த்தைகள் வருகின்றனவே தவிர, தமிழ் மொழியின் இலக்கணத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. அதுவும் மாற வேண்டும். மாறவில்லை என்றால் இந்த வரிசையில் நாமும் சேர்ந்துவிடும் நிலை என்றாவது ஏற்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *